யாழ், மானிப்பாயில் அடாவடியில் ஈடுபட்ட கும்பல் : ஒருவர் கைது

யாழ்ப்பாணம் மானிப்பாயில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டதுடன், ஒருவரை வாளால் வெட்டிக் காயப்படுத்திய கும்பலைச் சேர்ந்தவர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாயிலுள்ள சந்தேகநபரின் வீட்டுக்கு நேற்றிரவு சென்ற பொலிஸார், அவரைக் கைது செய்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பண்டத்தரிப்பிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்குள் அண்மையில் வாள்களுடன் புகுந்து பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டவர்களில் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மானிப்பாய் நவாலி வடக்கில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் புகுந்த மூன்று பேர், அங்கு வசிக்கும் இளைஞன் ஒருவரை வாளால் வெட்டிக்காயப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.

சம்பவத்தில் கையில் படுகாயமடைந்த 20 வயதுடைய சத்தியசீலன் சயந்தன் என்ற இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவத்தையடுத்து நேற்று மாலை மானிப்பாய் செல்லமுத்து வீதியில் உள்ள முன்னாள் போராளி ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கு தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் சவுண்ட் சிஸ்ரம் என்பவற்றைத் தாக்கி தீயிட்டு கொழுத்திவிட்டுச் சென்றிருந்த்து.

இந்தச் சம்பவம் இடம்பெறும்போது முன்னாள் போராளியின் குடும்பம் வெளியில் சென்றிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் நேற்றிரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!