அருவக்காட்டில், தொடரும் குப்பை வண்டிகள் மீதான தாக்குதல்.

கொழும்பிலிருந்து அருவக்காட்டுக்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற லொறிகளை இலக்கு வைத்து மீண்டும் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இந்தத் தாக்குதலில் 4 வாகனங்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து குப்பைகளை ஏற்றிக்கொண்டு அருவக்காட்டை நோக்கிப் பயணித்த 28 லொறிகள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புத்தளம் மற்றும் மணல்தீவு பகுதிகளை அண்மித்த பகுதிகளில் மறைந்திருந்த சிலர் குறித்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள குப்பைகளை கெரவலப்பிட்டிய குப்பைமேட்டில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் குப்பைகளை கொட்டுவதில் சிரமம் ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து புத்தளம் அருவக்காட்டில் குப்பைகளைக் கொட்டுவதற்கு இடமளிக்குமாறு வனாத்தவில்லு பிரதேச சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதனைத்தொடர்ந்து குப்பைகளை அருவக்காட்டில் கொட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் அங்கு குப்பைகளை கொண்டுசென்ற வண்டிகள் தொடர்ச்சியாக திருப்பி அனுப்பப்பட்டிருந்தன. குப்பைகளைக் கொண்டுசென்ற டிப்பர் வண்டிகள் மீது நேற்று முன்தினம் அதிகாலையும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், குப்பைகளைக் கொண்டுசெல்லும்போது, உரிய பாதுகாப்பை வழங்குமாறு கொழும்பு மாநகர சபை நேற்று முன்தினம் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கான கடிதம் நேற்று பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

அத்தோடு, குப்கைகளைக் கொண்டுசெல்லும் மார்க்கங்களிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையிலேயே குப்பைகளைக் கொண்டுசென்ற வண்டிகள் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!