கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவதாக அப்பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் தலைவர் ஜோசப் பிரான்சிஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
தமது பிரதேசத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து ரோலர் மற்றும் சுருக்குவலை போன்ற சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவதால் தமது பிரதேச மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இரணைதீவு பகுதிகளில் இரும்பு கம்பங்களை ஊன்றி களங்கண்டி போன்ற பல்வேறு சட்டவிரோத தொழில்களில் பலரும் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ள சமாச தலைவர், இரவு வேளைகளில் தாங்கள் தொழிலுக்கு செல்கின்றபோது படகுகள் மற்றும் வெளி இணைப்பு இயந்திரங்கள் சேதம் அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மானியங்கள் மற்றும் நிவாரணங்களை வழங்கி வரும் அரசு, மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில்லை எனவும் ஜோசப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்ட சுருக்கு வலை தடைச்சட்டம், இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், தமது பிரதேசங்களில் நடைபெறுகின்ற சட்டவிரோத தொழில்கள் தொடர்பில் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ள பூநகரி சமாச தலைவர், இது தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார். (சி)