பாதுகாப்பு அமைச்சு, உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து ஜனாதிபதி செயலகம் அமுல்படுத்தியுள்ள கிராம பாதுகாப்பு கருத்திட்டத்தின் திருகோணமலை மாவட்டத்துக்கான நிகழ்வு, நேற்று நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் நடைபெற்ற நேற்றைய நிகழ்வானது, அரச பணியாளர்களை அறிவூட்டும் விசேட நிகழ்வாக நடைபெற்றது.
கிராம பாதுகாப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எச்,டீ.கமல்பத்மசிறி சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு சம்பிரதாய பூர்வமாக நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
இந்த கிராம பாதுகாப்பு திட்டம், ஆரம்பத்தில் கிராமசேவகர் பிரிவிலும் பின்னர் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச மட்டத்திலும், மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட மட்டத்திலும் உருவாக்கப்பட்டு தேசியமட்டத்தில் அமுல்படுத்தப்படவுள்ளது.
பிரதேச மட்டத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகவும், கிராம, பிரதேச, மாவட்ட மட்ட அதிகாரம் கொண்ட அரச உத்தியோகத்தர்கள், முப்படையினரையும் உள்ளடக்கியதாக இப் பாதுகாப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.
இத்திட்டத்தினூடாக, கிராம மட்டத்தில் கிராம பாதுகாப்பு, போதைத் தடுப்பு, சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு உள்ளிட்ட அனைத்து பொது மக்கள் சார் பாதுகாப்பு நடவடிக்கைகளும் கிராம பாதுகாப்பு கருத்திட்டத்தினுள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், திருகோணமலை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் கே.அருந்தவராஜா, ஜனாதிபதி செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். (சி)