யால ரிதியகம திறந்தவெளி மிருகக்காட்சிசாலையில் உரிய வசதிகள் செய்யப்படாததால் சுற்றுலாப்பயணிகள் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.
ரிதியகம சப்பாரி திறந்தவெளி மிருகக்காட்சி சாலையை பார்வையிட வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிற்கு உரிய வசதிகள் செய்துகொடுக்கப்படுவதில்லை என சுற்றுலாப்பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
திறந்தவெளி மிருகக்காட்சிசாலையாக ரிதியாகம சப்பாரி திறந்தவெளி மிருகக்காட்சி சாலை விளங்குகின்றது.
இந்த மிருகக்காட்சிசாலையினை பார்வையிடுவதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் நாளாந்தம் வருகை தருகின்றனர்.
ஆனால் வருகை தரும் சுற்றுலா பிரயாணிகளுக்கு போதியளவு வசதிகள் செய்யப்படாத காரணத்தால், மிருகக்காட்சி சாலையினை பார்வையிடுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த நேரதாமதம் காரணமாக திட்டமிட்டவாறு சுற்றுலாவினை நிறைவு செய்ய முடியாது போயுள்ளதாக பலர் குற்றம்சுமத்துகின்றனர்.
திறந்தவெளி மிருகக்காட்சி சாலையினை பார்வையிட செல்லுபவர்களுக்கு, போதியளவான வாகன வசதியின்மையே, இவ்வாறான தாமதங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.
குறித்த திறந்தவெளி மிருகக்காட்சி சாலை எதிர்காலத்தில் மேலும் விஸ்தரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கான போக்குவரத்து நடவடிக்கைகளையும் மேம்படுத்துமாறு சுற்றுலாப் பயணிகள், துறைசார் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.