இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நியமித்தமைக்கு, அமெரிக்கா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
23 ஆவது இராணுவ தளபதியாக, ஷவேந்திர சில்வா இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரது நியமனம் குறித்து, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ‘ஐக்கிய நாடுகள் சபையினாலும் ஏனைய அமைப்புக்களினாலும் ஆவணப்படுத்தப்பட்ட, அவருக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களானது, பாரதூரமானதும் நம்பகரமானவையும் ஆகும்.
குறிப்பாக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை, மிகவும் முக்கியமாக காணப்படும் இந்த தருணத்தில், இந்த நியமனமானது இலங்கையின் சர்வதேச நன்மதிப்பையும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்குமான, அதன் உறுதிப்பாட்டினையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக அமைந்துள்ளது.
என அமெரிக்க தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய தனிநபரான மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இராணுவ தளபதியாக நியமித்துள்ளமையானது, தமிழ் மக்களுக்குச் செய்கின்ற பெரும் அவமரியாதையாகும் எனவும், சவேந்திர சில்வாவின் இந்த நியமனத்தினால், நாங்கள் மிகுந்த கலக்கமடைந்திருக்கிறோம் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. (007)