ஆலையடிவேம்பில் காட்டு யானைகள் அட்டகாசம் : தென்னை மரங்கள் சேதம்

அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பட்டிமேடு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான தென்னந் தோப்பில் நுழைந்த காட்டு யானைகள் அங்கு காய்த்த நிலையில் இருந்த 20 ற்கும் மேற்பட்ட பயன்தரு தென்னை மரங்களை துவம்சம் செய்துள்ளதுடன் காவலரணையும் முற்றாக உடைந்தெறிந்துள்ளது.

இச்சம்பவம் நேற்று நள்ளிரவு நடைபெற்றுள்ளது எனினும் அங்கிருந்த காவலாளி யானையின் தாக்குதலில் இருந்து அஷ்டவசமாக தப்பித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தோப்பின் பாதுகாப்பு வேலியை உடைத்து உள் நுழைந்த யானைகள் தோப்பில் காய்த்த நிலையில் இருந்த இளம் தென்னம் பிள்ளைகளை பிடிங்கி எறிந்துள்ளதுடன் நிலக்கடலைச் சேனையையும் துவம்சம் செய்துள்ளதுடன் அங்கிருந்த காவலரணையும் முற்றாக சேதப்படுத்தியுள்ளது.

இதனை தடுப்பதற்காக அங்கிருந்தவர்கள் முயன்ற போதும் அது பயனளிக்கவில்லை எனவும் இதனால் பல இலட்சம் ரூபாவினை இழந்துள்ளதாகவும் தென்னந் தோப்பினை பராமரிக்கின்றவர்கள் கவலையுடன் தெரிவித்தார்.

யானையின் தாக்குதலில் இருந்து மக்களையும் மக்களது உடைமைகளையம் பாதுகாப்பதற்காக யானை வேலி அமைக்கப்படும் என பலரும் பலமுறை கூறிவருகின்ற போதிலும் அவ்வாறான உரிய செயற்பாடுகள் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்தினர்.

மேலும் இதற்கான உரியதும் நிரந்தரமானதுமான தீர்வினை வழங்காமல் அரசு இழுத்தடிக்குமானால்; தமது தென்னைப் பயிர்ச்செய்கை மற்றும் சேனைப் பயிர்ச்செய்கையினையும் கைவிட வேண்டிய நிலை உருவாகும் எனவும் கூறினர்.

ஆகவே இவ்விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் அரசாங்கமும் உரிய நடவடிக்கை எடுத்து தம்மை பாதுகாக்க முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் யானையின் தொல்லை அன்மைக்காலமாக குறைவடைந்த போதும் தற்போது அதிகரிக்கப்பட்டு வருகின்றமையும் இதனால் விவசாய செய்கையும் பாதிக்கப்படும் நிலை தோன்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!