பா.உ தினேஸ் குணவர்தன, பருத்தித்துறையில் விசேட சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு உட்பட்ட, இலங்கை போக்குவரத்து சபை சாலைகளின் தொழிற் சங்கங்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு, பருத்தித்துறை நகரிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.


இந்த சந்திப்பு, பருத்தித்துறை சாலையின், இலங்கை மோட்டார் போக்குவரத்து ஊழியர் சங்க செயலாளர் வே.ரமேஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதில், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் ஐ.ரங்கேஸ்வரன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் சாந்தாதேவி, நகர சபை உறுப்பினர் எம்.பிறேம்குமார் மற்றும் கோண்டாவில் பருத்தித்துறை சாலைகளின் அகில இலங்கை மோட்டார் போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், அகில இலங்கை மோட்டார் போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலர் சுஜித் பண்டார உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது கருத்து வெளியிட்ட, அகில இலங்கை மோட்டார் போக்குவரத்து ஊழியர் சங்க பிரதிநிதிகள், தமது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட சாலைகளில், சாரதிகள், நடத்துனர்கள் ஓய்வு பெறும் அறைகளோ அல்லது பாதுகாப்பான மலசல கூடங்களோ இல்லை என்றும், பல வருடங்களாக தமது சாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்ற, பல சாரதிகள் நடத்தினர்கள் உட்பட்ட பணியாளர்கள், நிரந்தர நியமனம் வழங்கப்படாது புறக்கணிக்கப்படுவதாகவும், சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், வடக்கு தவிர்ந்த சாலைகளில், சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்ட நிலையில், தமது சாலைகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாகவும், தமது வேலைக்கு ஏற்ப, மேலதிக நேரக்கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை எனவும், அகில இலங்கை மோட்டார் போக்குவரத்து ஊழியர் சங்க பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவிடம் முறையிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!