எழுச்சிபெறும் பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் சமய புத்தெழுச்சியை நோக்கமாகக்கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள வெலிக்கந்த மொனராதென்ன ஸ்ரீ தர்ம விஜயராம விகாரையின் பிக்குமார் தங்குமிட விடுதி மற்றும் நெலும்வௌ, லங்காபுர ரஜமகா விகாரையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள பிக்குகளுக்கான தங்குமிட விடுதியை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன நேற்று மகாசங்கத்தினரிடம் கையளித்தார்.
மொனராதென்ன ஸ்ரீ தர்ம விஜயராம விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, சமயக் கிரியைகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் நினைவுப் பலகையை திரை நீக்கம் செய்து கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த புதிய கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக ஐந்து மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் ஜனாதிபதியால் விகாரையின் வளாகத்தில் மரக்கன்று ஒன்று நடப்பட்டது.
விகாராதிபதி சங்கைக்குரிய சேருபிடியே ஆனந்த நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் பிரதேச பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி பிரதேச மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடியதுடன், அவர்களது சுகதுக்கங்களையும் கேட்டறிந்தார்.
பொலன்னறுவை நெலும்வௌ, லங்காபுர ரஜமகா விகாரையில் 02 மில்லியன் ரூபா செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள புதிய பிக்குகளுக்கான தங்குமிட விடுதியையும் ஜனாதிபதி மகாசங்கத்தினரிடம் கையளித்தார்.
விகாரைக்குச் சென்ற ஜனாதிபதியை விகாராதிபதி சங்கைக்குரிய மெட்டிபெத்திகே சந்திர விமலங்கார நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசீர்வதித்தனர். பிக்குகளுக்கான தங்குமிட விடுதியை திறந்து வைத்த ஜனாதிபதி அதனை பார்வையிட்டார்.
ஆளுநர்களான பேசல ஜயரத்ன, சுரேன் ராகவன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.