அனைவரையும் ஒற்றுமைப்படுத்துவது ஐ.தே.கவே – பி.ஹரிசன்

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என தனியாக மக்களை வகைப்படுத்தி இந்த நாட்டில் அரசியல் செய்ய முடியாது எனவும், அனைவரும் ஒன்றிணைந்தே இந்த நாட்டை கட்டியெழுப்பமுடியும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் பி.ஹரிசன், அனைத்து மக்களையும் ஒற்றுமைப்படுத்தி அரசியல் செய்கின்ற ஒரே கட்சி ஜக்கிய தேசிய கட்சியே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர்; தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் அழைப்பின்பேரில் ஆலையடிவேம்பிற்குச்சென்றிருந்தார்.

அங்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் பீ.ஹரிசன்,

இந்த அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கும் போதெல்லாம், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் அதுபோல் முஸ்லிம் காங்கிரசும் விசேடமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் கைகொடுத்து இந்த அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதற்கு உதவினர்.
அதுபோல் இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான கோடீஸ்வரன், மன்சூர், இஸ்மாயில் உள்ளிட்டவர்கள் விலை போகதவர்களாகவும் பணத்திற்கு அடிமைப்படுத்த முடியாதவர்களாகவும் இருந்தனர். அவர்கள் மக்கள் நலன் கருதியே முடிவுகளை மேற்கொண்டனர்.

இவர்கள் வெள்ளை வான் கடத்தல், பயமுறுத்தல், ஆயுதங்களினால் கொலை செய்தல் போன்ற யுகமொன்றை ஏற்படுத்துவதற்கு இடமளிக்காதவர்கள். கடந்த முப்பது வருடகாலம் மிகவும் துக்கமானதுடன், அனைத்து அபிவிருத்திகளும் தடைப்பட்ட காலம். குறிப்பாக தமிழர்களே இதனால் பாதிக்கப்பட்டனர். ஆகவே இனிவரும் காலங்களில் குறித்த அபிவிருத்திகள் யாவும் சிறப்பாக முன்னெடுக்கப்படும்.
இதற்கமைவாக குறித்த பிரதேசங்களில் இரு நெற்களஞ்சிய சாலை இந்த வருடத்தினுள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக 600 இலட்சம் ரூபா செலவு செய்யப்படும். அத்தோடு 12 குளங்களை புனரமைக்கவும் 12 கிலோமீற்றர் விவசாய வீதிகளை செப்பனிடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.மீனவர்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இச்செயற்பாடுகள் யாவற்றையும் ஆரம்பித்ததன் பின்பே உங்களது பிரதேசத்திற்கு மீண்டும் வருவேன். என்று குறிப்பிட்டார்.

நிகழ்வில் அமைச்சர் தயாகமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஜ.எம்.மன்சூர், எஸ்.எம்.இஸ்மாயில், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டார, மேலதிக அரசாங்கஅதிபர் வி.ஜெகதீசன் அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வருகை தந்த அதிதிகளுக்கு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
இதன் பின்னர் பிரதேச செயலாளரின் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அதிதிகள் நிறைவாக கைத்தறி பொருட்களையும் மக்களிடம் கையளித்தனர்.

இதேவேளை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காட்டுக்கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை கையளிக்கும் நிகழ்வு பனங்காடு ஜக்கிய கிராமிய அமைப்புக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதன்போது ஒரு கோடி ரூபா செலவில் காபட் வீதியாக புனரமைக்கப்பட்ட சிவன் கோவில் வீதி மற்றும் பனங்காடு பாசுபததேசுவரர் ஆலயத்தில் 5 இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட பண்டகசாலை பனங்காடு பொது விளையாட்டு மைதானத்தில் 20 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பார்வையாளர் அரங்கு ஆகிய அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.
நிகழ்விற்குச் சென்ற அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், பிரதேச சபை தவிசாளர் க.பேரின்பராசா உள்ளிட்டவர்களை, பனங்காடு ஜக்கிய கிராமிய அமைப்புக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.

தொடர்ந்து கேணிக்கரைப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அதிதிகள் இணைந்து காபட் வீதியை திறந்து மக்கள் பாவனைக்காக கையளித்தனர். பின்னர் சிவன் ஆலயத்தில் நிர்மானிக்கப்பட்ட பண்டகசாலையினையும் பனங்காடு பொது விளையாட்டு மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட பார்வையாளர் அரங்கினையும் திறந்து வைத்தனர். தொடர்ந்து தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியதுடன் மங்கள விளக்கேற்றி மேடை நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர். இதேவேளை அதிதிகளை வரவேற்கும் முகமாக நர்த்தனாலய மாணவிகள் இணைந்து வழங்கிய நடனமும் அனைவரது வரவேற்பையும் பெற்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினரும் மேலதிக அரசாங்க அதிபரும் ஏற்பாட்டாளர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரி.சுரேன் இணைப்பாளர் எம்.காளிதாசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!