பொகவந்தலாவ பூசாரி மலையில் மனித எச்சங்கள் மீட்பு

நுவரெலியா பொகவந்தலாவ சீனாகொலை பூசாரி மலையில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நுவரெலியா பொகவந்தலாவ சீனாகொலை பூசாரி மலையில் நேற்று மாலை மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

பொகவந்தலாவ சீனாகொலை பூசாரி மலை இரண்டாம் இலக்க தேயிலைமலையில் நேற்று பொலிஸாரால் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில், ஹட்டன் பொலிஸ் நிலைய தடவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ்ப்பிரிவு தோட்டப்பகுதியில் வசித்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான பெருமாள் செல்வம் காணாமல் போயுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், காணாமல் போனவர் பயன்படுத்திய தொலைபேசி தொடர்பில் ‘இமி இலக்கத்தின் மூலம்” விசாரணைகளை மேற்கொண்ட போது, சீனாகொலை பூசாரிமலையில் குறித்த தொலைபேசி பயன்படுத்தப்படுவது இனங்காணப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்தபோது, சீனாகொலைபூசாரி மலைப் பகுதியில் வதியும் விஜயலெச்சுமி எனும் பெண்மணி, குறித்த தொலைபேசியை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது வடிகால் ஒன்றில் இருந்து மீட்டதாகவும், அதனை தனது மகனிடம் கொடுத்து, வேறு ஒரு சிம் அட்டையினை மாற்றி பயன்படுத்தி வந்தமையும் தெரியவந்தது.

இதனையடுத்து, தொலைபேசி மீட்கப்பட்ட இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அங்கு மனித எச்சங்களை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து, கொட்டியாகலை கீழ்ப்பிரிவு தோட்டப்பகுதியில் கடந்த வருட இறுதியில் காணாமல் போனவரின் மனைவியை அழைத்து விசாரணைகளை நடாத்தி வாக்குமூலம் ஒன்றினையும் பொலிஸார் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, மனித எச்சம் மீட்கப்பட்ட இடத்தில் விசாரணைகளை மேற்கொண்ட ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் சஞ்சீவ பொன்சேகா, மீட்கப்பட்ட எச்சங்களை கொழும்பு இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்புமாறு உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!