தேசிய மெய்வல்லுநர் போட்டியில் சாதனை

97 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியில்  பெண்களுக்கான  1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற நிமாலி  லியனாராச்சி தேசிய சாதனையுடன் முதலிடம் வென்றார். இதுவே இதுவரை பதிவான ஒரேயொரு இலங்கை சாதனையாகும். 

ஐக்கிய அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்த மரதன் ஓட்ட வீராங்கனையான ஹிருனி விஜேரட்ண பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் 35 நிமிடங்கள் 30 செக்கன்களில் ஓடி முதலிடம் பிடித்தார்.

கொழும்பு சுகததாச  விளையாட்டரங்கில் கடந்த வெள்ளின்று ஆரம்பமான 97 ஆவது  தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டி இன்றைய தினத்துடன் நிறைவடைகிறது.

தேசிய சாதனை படைத்த நிமாலி

பெண்களுக்கான 1500  மீற்றர் ஓட்டப் போட்டியில் சிறப்பாக ஓடிய நிமாலி லியனாராச்சி புதிய தேசிய சாதனையுடன் முதலிடம் பிடித்தார். இவர் இப்போட்டித்  தூரத்தை 4 நிமிடங்கள் 15.89 செக்கன்களில் நிறைவு செய்ததன் மூலம், 2012 ஆம் ஆண்டு சம்பிக்கா தில்ருக்சியால் ஏற்படுத்தப்பட்ட 4 நிமிடங்கள் 16.42  செக்கன்கள் என்ற தேசிய சாதனையை முறிடித்தார்.

இப்போட்டியில் இரண்டாம் இடத்தை கயன்திகா அபேரட்ணவும் (4 நிமி.22.24 செக்.), முன்றாம் இடத்தை கே.ஏ. குமாரியும் (4 நிமி.49.77 செக்.), பெற்றுக்கொண்டனர்.

முப்பாய்ச்சலில் சப்ரினுக்கு முதலிடம்

போட்டியின் முதல் நாளான வெள்ளியன்று நடைபெற்ற ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் சப்ரின் அஹமட் 16.33 மீற்றர் தூரம் பாய்ந்து முதலிடம் வென்றார். வெலிகமவைச் சேர்ந்த இவர் எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியைப் பெற்றார். 

தெற்காசிய விளையாட்டு விழாவில் தனது திறமைகளை அனைத்தையும் வெளிப்படுத்தி தாய்நாட்டுக்கு பதக்மொன்றை பெற்றுக்கொடுப்பதே எனது பிரதான நோக்கமாகும். எனினும், பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவில் உள்ளதால் எனக்கான விளையாட்டு உபகரணங்கள், போஷாக்கான உணவு போன்றவற்றுக்கு பெருந்தொகையான பணம் செலவாகிறது. இதுபோன்று இன்னும் பல சவால்களை எதிர்கொண்டே இப்போட்டியில் நான் தொடர்ந்தும் பங்கேற்று வருகின்றேன் என சப்ரின் அஹமட் தெரிவித்தார்.

யாழ். வீர வீராங்கனைகள் பிரகாசிப்பு

கோலூன்றிப் பாய்த்தல் மற்றும் உயரம் பாய்த்தல் போட்டிகளை மையப்படுத்தி இம்முறை தேசிய மெய்வல்லநர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்றிருந்தனர். இதில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தக்சிதா நேசராசா இரண்டாம் இடத்தையும், அனிதா ஜெகதீஸ்வரன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். மேலும், ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் இறுதிக்கு அருந்தவராசா பவிதரன் முன்னேறினார்.

முதலிடத்தை தவறவிட்ட தக்சித்தா 

நேற்றைய இரண்டாம் நாளான்று நடைபெற்ற கோலூன்றிப் பாய்தலில் பங்கேற்ற சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவியான நேசராசா தக்சிதாவுக்கும், ஷஷினிக்கும் பலத்த போட்டி நிலவியது. இவ்விருவரும் 3.40 மீற்றர் உயரம் தாவியதுடன், 3.45 மீற்றர் உயரத்தை தாவ எடுத்துக்கொண்ட மூன்று முயற்சிகளிலும் இருவரும் தோல்வியடைந்தனர். 3.40 மீற்றர் உயரத்தை தனது முதல் முயற்சியில் தாவிய ஷஷினிக்கு முதல் இடம் வழங்கப்பட்டது. மேற்படி உயரத்தை தனது மூன்றாவது முயற்சியில் தாவியதால்  தக்சிதாவுக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டது.

அனிதாவுக்கு மூன்றாமிடம்  

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அனிதா ஜெகதீஸ்வரன் 3.33 மீற்றர் உயரம் தாவி மூன்றாம் இடம் பிடித்தார். 3.40 மீற்றர் உயரத்தை தாவ எடுத்துக்கொண்ட மூன்று முயற்சிகளிலும் அனித்தா தோல்வியடைந்தார்.இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு யாழ் வீராங்கனையான ஹெரீனா 3.00 மீற்றர் உயரத்தை மாத்திரமே தாவியிருந்தார்.

இறுதிக்கு முன்னேறிய பவிதரன்

போட்டியின் முதல் நாளன்று நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் பங்கேற்ற யாழ் சாவகச்சேரி மாணவனும் புவிதரனின் சகோதரருமான அருந்தவராசா பவிதரன் 4.40 மீற்றர் உயரம் தாவிய பவிதரன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

முதல் சுற்றின்போது தாடை மற்றும் முழங்கால் பகுதிகளில்  காயமடைந்தபோதிலும், அவற்றை பொருட்படுத்தாமல் பங்கேற்ற  பவிதரன் அனைவரது பாராட்டை பெற்றார். இவர் பங்கேற்கும் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்ற மஹாஜனா கல்லூரி மாணவன் சுரேஸ்குமார் சுகி கேதரன் 3.85 மீற்றர் உயரத்தை தாவியிருந்ததுடன், மானிப்பாய் இந்து கல்லூரி மாணவனான சிவகுமார் கபில்சன் 3.85 மீற்றர் உயரத்தை தாவ தவறினார்.

100 மீற்றரில் ஹிமாஷ, சுகந்தி முதலிடம் 

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியை ஹிமாஷ ஏஷான், வினோஜ் சுரஞ்சய இருவரும் 10.49 செக்கன்கள் என்ற ஒரே நேரப் பெறுதியில் முடித்த போதிலும் சலன அசைவு புகைப்படத்தின்படி ஹிமாஷ ஏஷானுக்கு முதலிடமும்,  வினோஜ் சரஞ்சயவுக்கு இரண்டாமிடமும் வழங்கப்பட்டதுடன், முன்றாமிடத்தை 

பிரியதர்சன அபேகோன்(10.52 செக்கன்கள்) பெற்றார்.

பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் லக்சிக்கா சுகந்தி (12.08 செக்கன்கள்), அமாஷா டி சில்வா (12.20 செக்கன்கள்), சர்மிளா ஜேன் (12.24 செக்கன்கள்) ஆகியோர் முறையே முதல் முன்று இடங்களை பிடித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருமேஷிகா ரட்நாயக்க எல்லைக் கோட்டைடை அண்மித்திருந்தபோது, தசைப்பிடிப்பின் காரணமாக வெற்றியீட்ட முடியாமல் போனது.

400 மீற்றர் ஓட்டப்போட்டி

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் 46.76 செக்கன்களில் ஓடி முடித்த அருண தர்ஷன முதலிடம் பிடித்தார். பி.எல். குணரட்ண (47.18 செக்.) இரண்டாவது இடத்தையும் , ஆர்.என். ராஜகருண (47.49 செக்.) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

பெண்களுக்கான 400 மீற்றரில் நதீஷா ராமநாயக்க (53.11செக்.) முதலிடம் வென்றதுடன், கே.மதுஷானி (54.30 செக்.) இரண்டாவது இடத்தையும், ஈ.வீ. ரத்னகுமாரி (54.59 செக்.) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

அசத்திய ஹிருனி விஜேரட்ண

அமெரிக்காவில் வசித்துவரும் ஹிருணி, இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்காக சில தினங்களுக்கு முன்னர் இலங்கை வருகை தந்தார். 

நேற்றுக் காலை 7 மணிக்கு ஆரம்பமான பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டி அனைவரையும் கவர்ந்த போட்டியாக அமைந்தது.

இப்போட்டியில் பங்கேற்ற ஹிருணி விஜேரட்ண 35 நிமிடங்கள் 30 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடம் வென்று தெற்காசியப் போட்டிக்கு தகுதி பெற்றார்.  இவருக்கு சிறந்த போட்டியை அளித்த லங்கா ஆரியதாசா 35 நிமிடங்கள் 42 செக்கன்களில் ஓடி முடித்து இரண்டாவது இடத்தை பிடித்தார். இப்போட்டியின் மூன்றாவது இடத்தை எஸ். ஏ. லமாஹேவகே (36 நிமி.52.8 செக்கன்கள்) பெற்றார். 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!