ஐ.தே.கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டிய கட்டாயம் த.தே.கூ. இல்லை – சி.வி.கே.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டிய கட்டாயம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இல்லை. தமிழ் மக்களுக்கான தீர்வு என்ன என்பதை யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியிலும் உரைக்கும் கட்சியின் வேட்பாளருக்கே எமது ஆதரவினை வழங்குவோம்.

யாழ்ப்பாணம் கள்ளியங்காட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று காலை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தலைவர் பிரபாகரன் காலத்திலிருந்து எப்படி தீர்மானம் எடுத்து எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது வடக்கு தமிழ் மக்களுக்கு தெரியும். எங்களுக்கான தலைவரை தீர்மானிக்கிற வேலை ஐக்கிய தேசிய கட்சிக்கும் இல்லை ராஜித சேனாரட்ணவிற்கும் இல்லை. மொட்டுக் கட்சிக்கும் இல்லை. எங்கள் மக்கள் சரியான நேரத்தில் சரியான முடிவினை எடுத்து இருக்கின்றார்கள். அதனை சரியான முறையில் செய்து காட்டியும் இருக்கின்றார்கள்.

அரசாங்கப் பிரதிநிதிகள் வரலாம் போகலாம் அதில் நான் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தோம். அதற்காக நான் ஐக்கிய தேசிய கட்சிக்கா ஆதரவளிக்கப் போகின்றேன்? அவ்வாறு இல்லை.

நிலஅளவைத் திணைக்களத்தில் அளவு வேலையை செய்வதற்கு குச்சியை பிடிக்கும் கூலி வேலைக்கு தென்னிலங்கையிலிருந்து இளைஞர்கள் நியமிக்கப்படுகின்றார்கள். ஏன் வடக்கு தமிழ் இளைஞர்கள் அதற்கு தகுதி இல்லையா? அரசாங்கம் தமிழ் மக்களை புறக்கணிக்கின்றது. புறக்கணித்துக் கொண்டு நாங்கள் உங்களோடுதான், உங்களோடுதான் என்று சொல்லிக்கொண்டு செய்யும் அடாத்தான காரியம் இது. இதனை நாம் நீடிக்க அனுமதிக்க முடியாது. இதற்கு எதிராக தனிப்பட்ட ரீதியிலாவது நான் சில தீர்மானங்களை எடுக்க வேண்டி வரலாம். இது எமது மக்கள் சார்ந்த பிரச்சினை. பதவிக்காக இதனைச் சகித்து இருக்கக் கூடாது. நான் அப்படி இருக்கவும் மாட்டேன்.

யாராக இருந்தாலும் தமிழ் மக்களுக்கான தீர்வு என்ன என்பதை வெளிப்படையாக கூறி அதனை தென்னிலங்கையில் சிங்கள தேசத்தில் மக்கள் மத்தியிலும் சொல்லக் கூடியவராக இருக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் மட்டும் வந்து சொல்லிவிட்டு போற ஆளாக இருக்கக்கூடாது. சிங்கள தேசத்திலும் சொல்லி சில வேளைகளில் பெரும்பான்மையை பெறமுடியும். பெரும்பான்மை இல்லை என்பதற்காக எமது பிரச்சினைகளை கைவிட முடியாது. பெரும்பான்மை இல்லை என்று ரணில் கைவிரித்துவிட்டார். ஒரு கட்சிக்கு எதிரானவர்கள் என்று நாம் கூறினால் எம்மை அரவணைக்கும் கட்சியினர் எமக்கு வழங்கும் தீர்வினை குறைத்துவிடுவார்கள். (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!