முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க, முல்லைத்தீவு – மாங்குளம் ஆதார வைத்தியசாலையில், முள்ளந்தண்டுவடம் சிகிச்சை பிரிவுக்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின தலைமையில் நேற்றையதினம் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. நெதர்லாந்து அரசின் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த கட்டடம் அமைக்கப்படவுள்ளது.
கட்டம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் உட்பட வைத்திய அதிகாரிகள், சுகதார திணைக்கள உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
வடக்கு – கிழக்கில் யுத்தத்தினால் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு, செயற்படமுடியாத நிலையில் பலர் வாழ்ந்துவரும் நிலையில், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்படும் சிகிச்சை நிலையம் அவர்களுக்கான வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.(மு)