அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்பாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கடலரிப்பினை தடுத்து வரலாற்று சிறப்பு மிக்க ஆலயத்தினைப் பாதுக்காக்கும் வகையில் கற்வேலிகள் அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ் கற்வேலியினை அமைக்கும் பணியில் கரையோரம் பேணல் மூலவளத் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக சுமார் 120 மீற்றர் தூரம் கற்வேலிகளை அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
திருக்கோவில் பிரதேசத்தில் ஒவ்வொரு வருடமும் பாரிய கடலரிப்பு ஏற்படுவதுடன் கடலோரமாக இருக்கின்ற தென்னை மரங்கள் நுற்றுக் கணக்கில் அழிவடைந்து வருவதுடன் இயற்கையாக அமைந்து கடலோர சூழலும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குறிப்பாக கடந்த வருடம் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்பாக பாரிய கடலரிப்பு ஏற்பட்டு ஆலய வளாகத்திற்கு கடல் நீர் வங்கப்பட்டதுடன் வீதியும் சேதமடைந்து இருந்த நிலையில் மணல் மூடைகளை கொண்டு தற்காலிகமான தடுப்புக்களை முன்னெடுத்து இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்,
முன்னாள் திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், திருக்கோவில் பிரசே சபை தவிசாளர் இ.வி.கமலராஜன் மற்றும் சித்திரவேலாயுத சுவாமி ஆலய நிருவாகம் ஆகியோர் கல்முனை கரையோரம் பேணல் மூலவளத் திணைக்களத்தினரின் கவனத்திற்கு கொண்டு சென்று இருந்தனர்.
இந்நிலையில் கரையோரம் பேணல் மூலவளத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகளில் அடிப்படையில் தற்போது கற்வேலிகள் அமைக்கப்பட்டு வருவதுடன் இது சுமார் 20 வருடங்களுக்கு கடலரிப்பை தடுக்கக் கூடியதாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.