ரவிராஜ், மகேஸ்வரன் கொலைக்கு காரணமானவர்களை ரணில் அரசு ஏன் கண்டுபிடிக்கவில்லை? கம்மன்பில

ரவிராஜ், மகேஸ்வரன் கொலைக்கு காரணமானவர்களை கடந்த ஐந்து வருடங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டு பிடிக்காது இருப்பது ஏன் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.

மகேஸ்வரன், ரவிராஜ் கொலைக்கு காரணமானவர்களை ராஜபக்ச அரசு கண்டு பிடிக்கும் பொறுப்பிலிருந்து தவறிவிட்டது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

வெள்ளைவான் கலாச்சாரத்தினை உருவாக்கியவர் ரணில் விக்கிரமசிங்க என்பதை ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் அமைத்த ஜனாதிபதி ஆணைக்குழு சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்ட அவர் ரணில் ஆரம்பித்த வெள்ளைவான் கலாச்சாரத்தினை முடிவுக்கு கொண்டுவந்தவர் மகிந்தராஜபக்ச என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் வெள்ளைவான் கலாச்சாரம் இருந்ததாக தெரிவித்துள்ளார். அது மீண்டும் உருவாகப் போவதாக பயம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கு முயற்சித்துள்ளார்.

உண்மையில் வெள்ளைவான் கலாச்சாரத்தினை ஏற்படுத்தியவர் ரணில் விக்கிரமசிங்க. நான் இதனைச் சொல்லவில்லை. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி அமைத்த ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்திருந்தது. வெள்ளைவானில் வந்த இளைஞர்கள் குழு அராஜகம் செய்தது என்றும். 1987ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இது நிகழ்ந்ததாகவும் சந்திரிக்கா ஜனாதிபதி அவர்கள் அமைத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது ஒரு புறமிருக்க 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் திகதி நான் பாராளுமன்றத்தில் கேட்ட கேள்வி ஒன்றிற்கு அமைச்சர் கஜந்த கருணாதிலக மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்கள் வெள்ளைவானில் கடத்தப்பட்டதாகவோ அல்லது காணாமல் செய்யப்பட்டதாகவோ எந்தவித சாட்சிகளும் இல்லை என்று பதிலளித்திருந்தார். இந்த இரண்டு விடயங்களையும் எடுத்துப் பார்த்தால் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்த வெள்ளைவான் யுகத்தை மகிந்தராஜபக்ச முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றார் என்று தெளிவாக தெரிகின்றது.

அரசாங்கத்திற்கு எதிராக இருந்ததன் காரணத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்களான நடராஜா ரவிராஜ், தியாகராஜா மகேஸ்வரன் ஆகியோர் கொலை செய்யப்பட்டதாகவும் அதற்கு காரணமானவர்களை கண்டு பிடிப்பதிலிருந்து ராஜபக்ச அரசு தவறிவிட்டதாகவும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

சரி எம்மால் கொலை செய்தவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம். கடந்த ஐந்து வருடங்களாக நீங்கள் பிரதமராக இருக்கின்றீர்கள். உங்கள் தலமையிலான அரசாங்கம் இருக்கின்றது. உங்களுக்கு நெருக்கமான இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைக்கு காரணமானவர்களை கண்டு பிடிக்க நீங்கள் ஏன் முயற்சிக்கவில்லை என்று நாம் கேள்வி எழுப்பவிரும்புகின்றோம். அதுமட்டுமல்ல ஐக்கிய தேசிய கட்சியின் சிறந்த தலைவரான லலித் அத்துல முத்தலிப் படுகொலைக்கு காரணமானவர்களை கண்டு பிடிப்பதற்கு தற்போதுவரையில் ஐக்கிய தேசிய கட்சியினருக்கு முடியாது இருக்கின்றது.

இது இலங்கை வரலாற்றில் இருக்கும் பிரச்சினை மட்டுமல்ல. தொழிநுட்ப வளர்ச்சியடைந்த அமெரிக்காவிலும் சில படுகொலைக்கான காரணங்களையும் பொறுப்பானவர்களையும் இதுவரை கண்டு பிடிக்கவில்லை. அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ் கனெடியை சுட்டுக்கொலை செய்தவர்கள் யார் என்பது இதுவரையில் கண்டறியப்படவில்லை. ஆகவே பொய்யான விடயத்தினை பரப்புவதற்கு பிரதமர் யாழ்ப்பாணத்தில் முயற்சிப்பதாகவே எமக்கு தெரிகின்றது. என்று தெரிவித்தார். (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!