மட்டு, போதனா வைத்தியசாலை கழிவுகளை புதைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கழிவுகளை புதைப்பதற்கான அனுமதியை, நீதிமன்றம் வழங்கிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்பகிஸ்கரிப்பு முடிவுக்கு வந்ததுடன் வைத்தியசாலை பணிகள் வழமைநிலைக்கு திரும்பியுள்ளது.


போதனா வைத்தியசாலையில் சேகரிக்கப்பட்ட கழிவுகளை நேற்று முன்தினம் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேப்பவெட்டுவானில் புதைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அப்பகுதி மக்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் உள்ள வைத்தியசாலை கழிவுகளை எரிக்கும் நிலையத்தில் கழிவுகள் கொண்ட வாகனத்தினை நிறுத்த முற்பட்ட போதிலும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு காரணமாக அங்கும் அதனை நிறுத்தி வைக்க முடியாத நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஆறு வாகனங்களில் இந்த கழிவுகள் வைக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் வைத்தியசாலையில் வைத்திய கழிவுகள் அகற்றப்படும் வரையில் பணிகளை மேற்கொள்ளமுடியாது என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு தவிர்ந்த ஏனைய அனைத்து பிரிவுகளும் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவந்தனர்.

இதேநேரம் வாகனங்களில் உள்ள வைத்தியசாலை கழிவுகளை வேப்பவெட்டுவானில் புதைப்பதற்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதுடன் அவற்றினை உலக சுகாதார நிறுவனத்தின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக குறித்த கழிவுகளை புதைக்க வேண்டும் என பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி கருப்பையா ஜீவராணி வேப்பவெட்டுவான் மற்றும் திராய்மடுக்கு சென்று அப்பகுதியின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்ததை தொடர்ந்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதைக்கப்பட்டதன் பின்னர் மாதாந்தம் குறித்த பகுதியை கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பணிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் நீதிமன்றத்தில் ஆஜராகிய பின்னர் குறித்த நீதிமன்ற தீர்ப்பினை மதிப்பதாக தெரிவித்தார்.

இதேநேரம் கழிவுகளை புதைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் தமது போராட்டங்களை கைவிடுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில் வைத்தியசாலையின் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாராணி கணேசலிங்கம் தெரிவித்தார்.

இதன் போது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிரேஸ்ட வைத்திய நிபுணர் எம்.மதனழகன், அரச வைத்தியர் சங்க மட்டக்களப்பு கிளை செயலாளர் டாக்டர் ரூபன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!