யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கான, புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று நடைபெற்றது.
நெதர்லாந்து அரசாங்கத்தின், ஆயிரத்து 180 மில்லியன் ரூபா செலவில், புதிய கட்டடம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல்லை, பிரதம விருந்தினராக கலந்துகொண்ட, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நாட்டி வைத்தார்.
நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ,சுமந்திரன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், எஸ்.சுகிர்தன் உட்பட வைத்தியர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.இதன் போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை, மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்துமாறு, சிவாஜிலிங்கம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது, சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதேபோன்று, இப்பொழுது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற சுமந்திரனும், இதே கோரிக்கையை விடுத்திருக்கின்றார்.
இந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
அதற்கமைய, ஆதார வைத்தியசாலை, விரைவில் மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும். வைத்தியசாலைக்கு குழந்தை வைத்திய அதிகாரி இல்லை என்று, பொறுப்பு வாய்ந்த அதிகாரி தெரிவித்திருக்கின்ற நிலையில், எதிர்வரும்; ஒரு மாதத்தில், இங்கு குழந்தை பெறுபேறு வைத்தியரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். என குறிப்பிட்டுள்ளார். (007)