மட்டு, போதனா வைத்தியசாலை கழிவகற்றலில் புதிய திருப்பம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கழிவகற்றலில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவு தவிர்ந்த அனைத்து பிரிவுகளும் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவரும் நிலையில், குறித்த சிக்கல் நிலையினை தீர்க்கும் வகையிலான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.


மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன், வைத்தியசாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கலாராணி ,வைத்திய அதிகாரிகள், செங்கலடி பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், செங்கலடி பிரதேச செயலாளர், செங்கலடி பிரதேச சபை தவிசாளர், செங்கலடி பிரதேச செயலக பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர்கள், கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட செயலக சுற்று சூழல் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நேற்று ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேப்பவெட்டுவான் பகுதியில், சுற்றாடல் அதிகாரசபை உட்பட அனைத்து திணைக்களங்களின் அனுமதியுடன், உலக சுகாதார நிறுவகத்தின் கோட்பாடுகளுக்கு அமைவாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கழிவுகளை புதைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இருந்தபோதிலும், அப்பகுதி மக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக கழிவுகளைப் புதைக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கழிவுகளை ஏற்றிச்சென்ற ஆறு வாகனங்கள் மீண்டும் மட்டக்களப்புக்கு திரும்பிய நிலையில் அவற்றினை மீண்டும் திராய்மடுவில் களஞ்சியப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையும் பிரதேச மக்களினால் எதிர்க்கப்பட்டதை தொடர்ந்து, அக்கழிவுகள் கொண்ட வாகனங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கொண்டுசெல்லப்ப்டடு நிறுத்திவைக்கப்பட்டன.

இந்த கழிவுகளை புதைப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரி கரடியனாறு பொலிஸ் ஊடாக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் அந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நிலைமையினை சீர்செய்யும் வகையிலும், வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள கழிவு வாகனங்களை அகற்றுவது தொடர்பிலும், நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இதன்போது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கழிவகற்றல் பிரச்சினைக்கு, நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் தீர்வு காண்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!