அம்பாறை – ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காட்டுக்கிராம மக்களின் குடிநீர்ப்பிரச்சினை எவ்வாறாயினும் தீர்க்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உறுதியளித்துள்ளார்.
மட்டக்களப்பு – ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காட்டுக்கிராம மக்கள் எதிர்கொள்கின்ற பாரிய பிரச்சினையாக குடிநீர் பிரச்சினை உள்ளது.
குடிநீர்ப்பிரச்சினை எவ்வாறாயினும் தீர்க்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உறுதியளித்துள்ளார்.
ஆலையடிவேம்பு – பனங்காட்டுக்கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காட்டுக்கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு பனங்காடு ஜக்கிய கிராமிய அமைப்புக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றது.
இதன்போது ஒரு கோடி ரூபா செலவில் காபட் வீதியாக புனரமைக்கப்பட்ட சிவன் கோவில் வீதி மற்றும் பனங்காடு பாசுபததேசுவரர் ஆலயத்தில் 5 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பண்டகசாலை, பனங்காடு பொது விளையாட்டு மைதானத்தில் 20 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பார்வையாளர் அரங்கு ஆகிய அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனும், கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், பிரதேச சபை தவிசாளர் க.பேரின்பராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.
விருந்தினர்களை பனங்காடு ஜக்கிய கிராமிய அமைப்புக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
தொடர்ந்து கேணிக்கரைப்பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, அதிதிகள் இணைந்து காபட் வீதியை திறந்து மக்கள் பாவனைக்கு கையளித்தனர்.
பின்னர் சிவன் ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட பண்டகசாலையினையும், பனங்காடு பொது விளையாட்டு மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட பார்வையாளர் அரங்கினையும் திறந்து வைத்தனர்.
தொடர்ந்து தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தியதுடன், மங்கள விளக்கேற்றி மேடை நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர்.
இதன்போது நர்த்தனாலய மாணவிகளின் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோர் ஏற்பாட்டாளர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரி.சுரேன், இணைப்பாளர் எம்.காளிதாசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், பொது மக்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.(நி)