தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நுவரெலியா ஹட்டன் போடைஸ் மக்களுக்கு வீடு அமைப்பதில் இழுபறி.

நுவரெலியா மாவட்டம் டிக்கோயா போடைஸ் தோட்டத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள், அடிப்படை வசதிகளின்றி தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

போடைஸ் தோட்டத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 24 வீடுகள் முற்றாக தீக்கிரையாகின. இத்தீபவித்து காரணமாக அம் மக்கள் அனைத்து உடைமைகளையும் இழந்து 20 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் நிர்கதி நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அதனை தொடர்ந்து அவர்களுக்கு நிவாரண உதவிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன், தோட்ட நிர்வாகமும் இராணுவமும் இணைந்து அவர்களுக்கு போடைஸ் விளையாட்டு மைதானத்தில் தற்காலிக கொட்டில்களை அமைத்து கொடுத்துள்ளன.

குறித்த கொட்டில்கள்  அமைத்துக்கொடுத்து எட்டு மாதங்கள் கடந்த நிலையில், அவர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்பதில் இழுபறி நிலவுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
தோட்ட நிர்வாகம் வீடுகளை கட்டுவதற்கு இடம் வழங்காமையே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தோட்ட நிர்வாகம் அவர்களுக்குரிய காணிகளை சுமார் ஐந்து கிலோமீற்றர் தொலைவில் அமைத்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இதனால் தங்கள் பிள்ளைகள் படிப்பதற்கும் நகரங்களுக்கு செல்வதென்றாலும், வைத்தியசாலைக்கு செல்வதென்றாலும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

தோட்டத்தில் வீடுகளை கட்டுவதற்கு பொருத்தமான இடங்கள் இருக்கின்ற போதிலும் அதனை வழங்காது. தோட்ட நிர்வாகம் தட்டிக்கழிப்பதாகவும், இது குறித்து பொறுப்பு வாய்ந்தவர்கள் மௌனம் காத்துவருவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தற்போது அமைத்து கொடுக்கப்பட்டுள்ள கொட்டில்களுக்குள் மழை நேரங்களில் வீட்டினுள் தண்ணீர் கசிவதனால் பலர் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்துவருவதாகவும்,
ஒரு சிலரின் வீடுகளின் மூங்கில்கள் இத்துப்போய் கொட்டில்களும் உடைந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட 20 குடும்ங்களைச் சேர்ந்த 108 பேரில் பாடசாலை மாணவர்கள் 25 பேர் அடங்குவதாகவும், இம்முறை உயர்தர பரீட்சைக்கு இருவரும், க.பொ.த காதாரணதர பரீட்சைக்கு ஒருவரும் தோற்றவதாக தெரிவித்த பெற்றோர், கொட்டில்களிலிருந்து தங்களது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது இடர்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த தற்காலிக கொட்டில்களுக்கு இரண்டு மின் குமிழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அது மாலை ஆறு மணி தொடக்கம் காலை ஆறு மணி வரை மாத்திரம் மினசாரம் தோட்ட நிர்வாகத்தினால் வழங்கப்படுவதாகவும் இந்த இரண்டு மின்குமிழ்களுக்காக சுமார் 800 ரூபா சம்பளத்தில் அறவிடப்படுவதாகவும் அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே இது குறித்த சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு உடனடியாக தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!