நாட்டை தவறாக வழிநடத்த எவரும் முயற்சிக்கக்கூடாது-ஜனாதிபதி!(படங்கள் இணைப்பு)

கண்டி எசெல பெரஹெர நிறைவடைந்ததை அறிவிக்கும் பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசெல பெரஹெர, பாரம்பரிய முறைப்படி இவ்வருடமும் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

என்பதை அறிவிக்கும் பத்திரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில், தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேலவினால் சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

ஊர்வலமாக ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற தியவடன நிலமே உள்ளிட்ட நாற்பெரும் தேவாலயங்களினதும் கிராமிய தேவாலயங்களினதும் நிலமேமார்களை ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலில் ஜனாதிபதி வரவேற்றார்.

அதனைத்தொடர்ந்து சம்பிரதாய முறைப்படி தியவடன நிலமேயினால் பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
‘எமது அபிமானமிக்க கலாசாரத்தின் முக்கியமான அம்சமாக விளங்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க உற்சவம் இந்நாட்டின் கலாசார பழக்க வழக்கங்களை எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வாகும்.

இவ்வருட ஊர்வலத்தினை வெற்றிகரமாக நடத்துவதற்கு பூரண அரச அனுசரணை பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன்,
கண்டி எசெல பெரஹெரவிற்கான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் எனது ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்பட்டது.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்து அனைத்து இனங்களுக்கிடையிலும் சமாதானம் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் தேசிய பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு சிலர் வெளியிடும் கருத்துக்கள் வருத்தத்தக்கது.

தமது குறுகிய அரசியல் இலாபங்களுக்காக நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான முறையற்ற பிரகடனங்களையும் தேவையற்ற விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டாம் என நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

இதனால் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சமும் சந்தேகமும் ஏற்படுவதோடு இது நாட்டின் அபிவிருத்தி, பாதுகாப்பு உள்ளிட்ட சகல செயற்பாடுகளுக்கும் தடையாக அமையும்.

குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய நாட்டை தவறாக வழிநடத்த எவரும் முயற்சிக்கக்கூடாது.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலின் பின்னர் நாட்டின் தேசிய பாதுகாப்பினை உச்ச அளவில் உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கமும் பாதுகாப்பு பிரிவினரும் முறையான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மீண்டும் அத்தகையதொரு பயங்கரவாத தாக்குதலுக்கு இலங்கை முகங்கொடுக்காதிருப்பதற்கு அதுவே காரணமாகும்.

வரலாற்று சிறப்புமிக்க எசெல பெரஹெர ஊர்வலத்திற்காக கண்டி மாவட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சிரமங்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முப்படையினர் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு படையினருக்கும் எனது நன்றிகள்.’என்று ஜனாதிபதி கூறினார்.

ஊர்வலத்தில் பங்கேற்ற கலைஞர்களுக்கு பாரம்பரிய முறைப்படி பரிசில்களும் விருதுகளும் இதன்போது ஜனாதிபதியினால் வழங்கப்பட்டதுடன், நாற்பெரும் தேவாலயங்கள் மற்றும் கிராமிய தேவாலயங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான நிதியுதவியும் வழங்கப்பட்டது.

இதன்போது ‘புனித தலதா கலாசாரம்’ எனும் நூல் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதோடு, ‘சிந்து’ யானைக்குட்டிக்கு பழங்களை வழங்கி ஜனாதிபதி உபசரித்தார்.

அதனைத்தொடர்ந்து பாரம்பரியமாக எடுக்கப்படும் நிலமேமார்களுடனான குழுப்புகைப்படத்திற்கும் ஜனாதிபதி தோற்றினார்.

இந்நிகழ்வில் ஜயந்தி சிறிசேன அம்மையார், ஆளுநர்களான சரத் ஏக்கநாயக்க, ரஜித் கீர்த்தி தென்னகோன், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!