தேசிய மெய்வல்லுநர் போட்டிகள் இன்று ஆரம்பம்

97 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டி இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இம்முறை 486 ஆண்களும், 147 பெண்களுமாக மொத்தமாக 633 பேர் பங்கேற்கின்றனர்.

இப்போட்டிகளில் வெற்றிபெறும் வீர, வீராங்கனைகள் தெற்காசிய விளையாட்டு விழாவுக்கு தகுதி பெறுவர்.

இம்முறை அதிக போட்டித் தன்மை மிக்க போட்டி நிகழ்வுகளாக ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் குறுந்தூர ஓட்டப் போட்டிகள் விளங்குகின்றன.

பெண்களுக்கான 100 மீற்றர் குறுந்தூர ஓட்ட வீராங்கனைகளான அமாஷா டி சில்வா, செலிண்டா ஜென்சன், ஷர்மிளா ஜேன், சதீப்பா ஹெண்டர்சன், ருமேஷிகா ரட்நாயக்க ஆகியோருக்கிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியின் பெண்களுக்கான 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பிடித்த ருமேஷிகா ரட்நாயக்கவுக்கு இளம் வீராங்கனைகளான அமாஷா, செலிண்டா, ஷர்மிளா ஆகியோர் பலத்த சவாலை அளிப்பர்.

இவர்களுடன், 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் மாத்திரம் கவனம் செலுத்தி வந்த நதீஷா ராமநாயக்க இம்முறை பெண்களுக்கான 200 மீற்றர்  போட்டியிலும் பங்கேற்கவுள்ளார்.

400 மீற்றர் ஓட்டப்போட்டியில் நதீஷா ராமநாயக்க, ரத்ன குமாரி ஆகியோருடன் இளம் வீராங்கனையான தில்ஷி ஷியாமலி ஆகிய  மூவருக்கிடையில் கடும் போட்டி நிலவும்.

இதேவேளை குறுந்தூர ஓட்ட வீரர்களான ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் ஹிமாச ஏஷான், வினோஜ் சுரஞ்சய , யுப்புன் அபேகோன் , மொஹமத் சபான், சானுக்க சந்தீப்ப , ஷெஹான் அம்பேப்பிட்டிய ஆகியோர் இந்த ஆண்டில் சிறந்த நேரப்பெறுதியில் ஓடி முடித்தவர்களாவர். எனினும், ஹிமாஷ ஏஷான், வினோஜ் சுரஞ்சய இருவரும் முதலிடத்துக்காக கடுமையாக முயற்சிப்பார்கள்.

ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் வினோஜ் சுரஞ்சயவுக்கு ஹிமாஷ ஏஷான், சபான் ஆகியோர் சிறந்த போட்டியை வழங்குவார்கள்.

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் இளம் வீரரான அருண தர்ஷன முதலிடத்தை வென்றெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப் போட்டி நிகழ்வில் பங்கேற்றுவந்த காலிங்க குமார தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியதால் அவருக்கு தடை விதித்துள்ளது, இதனால் காலிங்க குமாரவுக்கு இம்முறை இப்போட்டியில் பங்குகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகையால் அருண தர்ஷனவுக்கு அஜித் பிரேமகுமார மற்றும் இளம் வீரரான பசிந்து கொடிகார, பபசர நிக்கு ஆகியோர் அருண தர்ஷனவுக்கு சவால் அளிக்கக்கூடிய வீரர்களாவார்.

ஆகையால் பெண்களுக்கான குறுந்தூர ஓட்டப் போட்டிகள் மற்றும் ஆண்களுக்கான குறுந்தூர ஓட்டப் போட்டிகள் பலரது கவனத்தையும் ஈர்க்கும் போட்டி நிகழ்வுகளாக விளங்குகின்றன.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!