கழிவு முகாமைத்துவம் செய்ய முடியாத நிலை இருப்பதனால் அவசர சிகிச்சை தவிர்ந்த அனைத்து சிகிச்சைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க விசேட வைத்தியர்கள் சங்கம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரச தாதிய உத்தியோகத்தர் சங்கம் உட்பட்ட தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் க.கலாராணி தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கழிவகற்றல் பிரச்சினைகாரணமாக கழிவுகளை ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடுவில் புதைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் அங்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அது மீண்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த கழிவுகள் கொண்ட பாரவூர்திகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில் திராய்மடுவிலும் குறித்த குப்பைகள் கொண்ட பாரவூர்த்திகளை நிறுத்துவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக தற்போது வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கழிவுகள் அகற்றப்படாத நிலையில் வைத்தியசாலையின் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்கொண்டு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
காதார மற்றும் சூழலியல் ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட செய்முறையாக இருப்பதுடன் உலகளாவிய ரீதியில் கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளின் போது கையாளப்படும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பின்பற்றி அமைக்கப்படுகின்ற ஒரு மூடப்பட்ட செய்முறை அதன் பிரகாரம் இன்று சுகாதார அமைச்சு மற்றும் மத்திய சுகாதார அதிகார சபை ஆகியவற்றின் அனுமதியுடன் மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் வழிகாட்டலின் கீழ் செங்கலடி பிரதேச செயலாளரினால் வேப்பவெட்டவான் பிரதேசத்தில் வழங்கப்பட்ட ஒதுக்குப்புறமான அரச காணி ஒன்றில் கட்டிட திணைக்களத்தால் வடிவமைக்கப்பட்ட புதைகுழியில் பாதுகாப்பாக புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக இது தொடர்பில் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாராணி தெரிவித்தார்.
தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குப்பைகளை கொட்டும் வரைக்கும் தமது வைத்தியசாலையின் சேவைகளை நடாத்த முடியாத நிலையேற்படும் எனவும் அவர் தெரிவித்தார். (சி)