தேர்தல் காலத்தில் மக்கள் சரியான தீர்மானம் எடுக்க வேண்டும் : பிரதமர்

கடந்த ஆட்சியாளர்களைப் போல் அல்லாமல், நாட்டு மக்களின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல், வவுனியா பொது வைத்தியசாலையில் அபிவிருத்தி பணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘கடந்த அரசாங்கம் தார் வீதிகளையும் காப்பற் வீதிகளையும் அமைத்திருந்ததே தவிர, மக்களுடைய பொருளாதார ரீதியான அபிவிருத்திகளை ஏற்படுத்தவில்லை.

நாம், வடக்குப் பகுதி மக்களினுடையதும் நாட்டு மக்களினுடையதுமான, பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் திட்டங்களையே முன்னெடுத்திருக்கிறோம்.

வவுனியாவை பொறுத்த வரை, பொருளாதார மத்திய நிலையம், செட்டிக்குளத்தில் நீர் விநியோகத்திட்டம், வீட்டுத் திட்டங்கள், சுகாதார வசதி மேம்படுத்தல், வீதி அபிவிருத்தி திட்டங்களும் இந்த அரசாங்கத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தன.

நாம் எதிர்வரும் காலங்களில், வன்னிப் பிரதேச இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
இந்த வேலைத்திட்டமானது, தொழிற்சாலைகளை மாத்திரம் அமைத்து, வேலைவாய்ப்புக்களை வழங்குவதாக இருத்தல் கூடாது.

தென்பகுதி மக்களுடைய நெல் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்கள், வடக்கில் இருந்தே வருகின்றன.

ஆகவே இந்த உற்பத்தியை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக, எவ்வாறு உயர்த்த முடியும் என்பது தொடர்பாக சிந்தித்து, திட்டங்களை உருவாக்க வேண்டும்.

அதனூடாக வன்னி இளைஞர்களுக்கு அதிகளவான வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க முடியும். அதனையே நாம் முன்னெடுக்கவுள்ளோம்.
ஆகவே இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதற்கு, மக்கள் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும். மீண்டும் எமக்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கின்ற போதே, இவற்றைச் செயற்படுத்த முடியும்.

இதேவேளை, நெதர்லாந்து அரசாங்கத்திடம் இருந்து நிதியைப் பெறுவதற்கு முனைப்புடன் செயற்பட்ட, வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’
என குறிப்பிட்டுள்ளார்.

இன்று பிற்பகல், வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வவுனியா பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட, புதிய அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தை திறந்து வைத்தார்.

விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டதுடன், முதல் நிகழ்வாக, புதிய கட்டடத்திற்கான நினைவு திரைச்சீலையை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்தின, ஏனைய விருந்தினர்கள் திறந்து வைத்தனர்.

வவுனியா வைத்தியசாலையில், இரண்டாவது சுகாதாரதுறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, இதன் போது மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.

அத்துடன், நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள, இலகு கடன் உதவியில் அமைக்கப்படவுள்ள, இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்புடன், வவுனியா பொது வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின, நெதர்லாந்து நாட்டின் துணைத்தூதுவர் ஈவா வான்வோசம்பா, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியூதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிவமோகன், வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் மருத்துவர்கள், அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, யாழ். மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை கையளிக்கவுள்ளார்.

இன்று பிற்பகல், வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற நிலையில், இன்று மாலை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.

உலங்கு வானூர்தியில், யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் வந்திறங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி பிரமுகர்கள் வரவேற்றனர்.

அதனைத்தொடர்ந்து, யாழ்ப்பாணம் நாக விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர், விகாராதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தொடர்ந்து, தனியார் விடுதியொன்றில், மருத்துவத்துறை சார்ந்தவர்களுடன் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.

இதேவேளை, நாளை, யாழ். குடாநாட்டில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க கையளிக்கவுள்ளார்.

அதனடிப்படையில், நாளை காலை 7.00 மணிக்கு, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட வழிபாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர், தொடர்ந்து நல்லை ஆதீனத்தில், நல்லை ஆதீன சுவாமிகளையும், சைவ சமய தலைவர்களை சந்தித்து, சைவ சமயம் இன்று எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன், வலிகாமம் வடக்கு பிரதேசத்திற்கு, நாளை காலை 10.00 மணியளவில் விஜயம் மேற்கொள்ளும் பிரதமர், மயிலிட்டி துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளை கையளிக்கவுள்ளார்.

வலி. வடக்கில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 10 வீடுகளையும், பயனாளிகளிடம் கையளிக்கவுள்ளார்.

தொடர்ந்து, திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு மாடிக் கட்டத்தையும், பிரதமர் திறந்து வைக்கவுள்ளார்.
இந்த நிலையில், குருநகர் மீன்பிடி துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும், நாளை பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.
தொடர்ந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில், இயன் சிகிச்சை பிரிவும் திறந்து வைக்கப்படவுள்ளது.

நிகழ்வில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு, மக்கள் பாவனைக்காக இயன் சிகிச்சைப் பிரிவை கையளிக்கவுள்ளார்.
இதேவேளை, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை, காலை 9.00 மணியளவில், இந்திய அரசின் நிதி உதவியில் அமைக்கப்படும், கலாசார மண்டபத்தின் கட்டுமாணப் பணிகள் தொடர்பில், பிரதமர் ஆராயவுள்ளார்.

அத்துடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!