ஆயுதப் பயிற்சி பெற்றவர்களில், 50 வீதமான தீவிரவாதிகளே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தீவிரவாத அச்சுறுத்தல் இன்னும் முற்றாக நீங்கவில்லை எனவும், ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நேற்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
‘ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு, நாட்டின் பாதுகாப்பிற்கு பொறுப்பான அதிகாரிகள், அவர்களது கடமையில் இருந்து விடுபட்டு செயற்பட்டமையே காரணமாக இருக்கிறது.
2018, மார்ச் மாதம், எனக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால், சிலர் தேவையில்லாத காரணங்களைக்கூறி அந்த அமைச்சு எனக்கு கிடைக்கவிடாமல் தடுத்து விட்டனர்.
அன்று அந்த பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தால், நிச்சயமாக, இந்த அழிவு ஏற்பட நான் வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்க மாட்டேன்.
2018 ஆம் ஆண்டில், ஒட்டு மொத்தமாக 8 தடவைகள்தான் பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
2019 ஆம் ஆண்டில், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதத்தில், வெறும் இரண்டு தடவைகள் மட்டுமே, பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
நான் இராணுவத் தளபதியாக இருந்த 3 வருடங்கள், 9 மாதங்களில் கட்டாயமாக ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 10.00 மணிக்கு பாதுகாப்புச் சபைக் கூட்டம் இடம்பெறும்.
தற்போது கிடைத்துள்ள தகவலுக்கு அமைவாக, ஆயுதப் பயிற்சி பெற்றுக்கொண்ட நூற்றுக்கு 50 வீதமான தீவிரவாதிகளே, இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது.
இன்னும் 50 வீதமானவர்கள் வெளியில்தான் உள்ளனர். 130 பேரளவில் இதில் அடையாளம் காணப்பட்டாலும், 60 ற்கும் குறைவானவர்களே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
உண்மையில், தீவிரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்க, இன்னும் இங்கு முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது’ என குறிப்பிட்டுள்ளார். (சி)