மட்டு, புளியடிக்குடாவில், பங்கு ஆலய தந்தையர்கள் கௌரவிப்பு !

மட்டக்களப்பு மறை மாவட்ட மேற்றாசனத்தின் பிராந்திய கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய பங்கு தந்தையர்களை கௌரவிக்கும் நிகழ்வு, இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

கடந்த மூன்று வருடங்களாக மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தில் பங்கு தந்தையாகவும், கிறிஸ்தவ வாழ்வு சமூக உதவி பணியாளராகவும் பணியாற்றி தனது உயர் கல்வியினை தொடர்வதற்காக வெளிநாட்டு செல்லவுள்ள இயேசு சபை துறவி அருட்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளாரை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வும், புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தின் புதிய பங்கு தந்தையாகவும், கிறிஸ்தவ வாழ்வு சமூக உதவி பணியாளராகவும் பணிகளை பொறுப்பேற்றுள்ள இயேசு சபை துறவி அருட்தந்தை ரிஜெட் பிச்சை அடிகளாரை வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வும் இன்று புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தில் நடைபெற்றது.

புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தில் நடைபெற்ற விசேட திருப்பலியுடன் மேயர் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், அருட்தந்தையர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், நினைவு பரிசிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இயேசு சபை துறவிகளான அருட்தந்தை போல் சற்குண நாயகம், அருட்தந்தை லோரன்ஸ் லோகநாதன், அருட்தந்தை ரிஜெட் பிச்சை, அருட்தந்தை அம்புரோஸ், அருட்தந்தை றொசான், பிராந்திய கிறிஸ்தவ வாழ்வு சமூக உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள், பங்கு மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மறை மாவட்ட மேற்றாசனத்தின் பிராந்திய கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆன்மீகம் மற்றும் சமூக பணி வாழ்வில் தம்மை ஈடுபடுத்தி பணியாற்றுகின்ற அருட்தந்தையர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், அருட்தந்தை நவரெத்தினம் எழுதிய கிழக்கில் பிரான்சிய இயேசு சபையினர் என்ற நூல் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!