லோகி தோட்டத்தில் மண்சரிவு : 89 பேர் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.

இதற்கமைய லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டத்தில் நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 19 வீடுகளைக்கொண்ட லயன் குடியிருப்பு பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த லயன் குடியிருப்பில் 8 சமையலறைகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதுடன், ஒரு சமையலறை முற்றாக மண்ணினுள் புதையுண்ட நிலையில் காணப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த 19 வீடுகளிலும் வசித்து வந்த 19 குடும்பங்களைச் சேர்ந்த 89 பேர் குறித்த தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும், பாடசாலையிலும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் 48 ஆண்களும், 41 பெண்களும் அடங்குகின்றனர்.

கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் உள்ளிட்ட உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அவர்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவுகளையும், ஏனைய வசதிகளையும் தோட்ட நிர்வாகம், கிராம உத்தியோகத்தரின் ஊடாக கொட்டகலை பிரதேச சபையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்துள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!