சிங்கள முஸ்லிம் மக்களுடன் சண்டையிட்டு வாழ முடியாது : சுமந்திரன்

தமிழ் மக்கள் சிங்கள, முஸ்லிம் மக்களை எதிரிகளாகக் கொண்டு நாட்டில் சண்டையிட்டுக் கொண்டு வாழ விரும்பவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரின் அழைப்பின் பேரில் நேற்று மாலை இடம்பெற்ற தற்கால அரசியல் தொடர்பாக மக்கள் சந்திப்பின் போதே மேற்படிகருத்தினை அவர் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜக்கிய தேசிய கட்சி அரசுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு இருப்பதை தவிர எதனையும் தமிழ் மக்களுக்கு செய்யவில்லை என பாரிய குற்றச்சாற்றுக்களை முன்வைத்து வருகின்றனர்.  இவை அனைத்தும் அப்பட்டமான பொய்கள்.

நாங்கள் 80வீதமான காணியை விடுவித்துள்ளோம், ஒரு தொகுதி அரசியல் கைதிகள் விடுவித்துள்ளோம், தமிழ் மக்களின் அபிவிருத்திகள் மற்றும் புதிய அரசியல் அமைப்புக்கான பேச்சுக்கள் என பல்வேறு விடயங்களை பெற்றுக் கொடுத்திருக்கின்றோம்.

இன்று கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்துவது தொடர்பாக எம்மீது மக்களுக்கு கோபம் இருக்கின்றது, அது நியாயமானது மூன்று மாத காலம் அரசினால் காலக்கெடு வழங்கப்பட்டது, ஒருமாத காலக் கெடுவை நாம் கூறவில்லை அதனை பௌத்த குருவே தெரிவித்து இருந்தார்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருவகிறது, இன்னும் ஒருமாதத்திற்குள் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் அத்துடன் அதை நாம் முஸ்லிம் மக்களின் இணக்கப்பாட்டுடன் செய்ய வேண்டும் என்பதை விரும்புகின்றோம், தூரநோக்குடன் செயற்பட்டு தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து வாழக்கூடிய நிலைமைகளையும் உறுப்படுத்த வேண்டிய கடமைப்பாடு எமக்கு உண்டு.

நாம் இந்த நாட்டில் முஸ்லிம் மக்களுடனும், சிங்கள மக்களுடனும் எதிரிகளாக வாழ முடியாது. தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்திருந்தாலும் அயல்நாட்டுடன் சண்டையிட்டுக் கொண்டு வாழ முடியாது. நட்பு நாடாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

முஸ்லிம் தரப்பினர் நியாம் இல்லாது நடப்பார்கள் என்றால் அவர்களையும் ஒரு நிலைக்கு கொண்டுவந்து இன ஜக்கியத்துடன் வாழ்வதற்கான ஆரோக்கியமான விடங்களை தூரநோக்குடன் செயற்படுத்த வேண்டும். இல்லாது போனால் இணைந்த வடக்கு கிழக்கு என்ற இலக்கு இல்லாமல் போய்விடும்.

இந்நிலையில் தற்போது ஜனாதிபதி தேர்தல் ஒன்று வருகின்றது. 1994 ஆம் ஆண்டு முதல் எல்லா அரசியல் தலைவர்களும் நாட்டு மக்களுக்கு ஒரு வாக்குறுதியை கொடுத்து வருகின்றனர். இந்த நாட்டுக்கு இப்போது தேவையானது ஜனாதிபதி தேர்தல் அல்ல, புதிய அரசியல் அமைப்புச் சட்டம் என சம்பந்தன் தெரிவத்து வருகின்றார். இதனை அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரை சந்தித்த போது சம்பந்தன் கூறினார்.

நாங்கள் இந்த அரசாங்கத்துடன் இவ்வளவு தூரம் பயணித்தும் புதிய அரசியல் அமைப்புச் உருவாக்குவதில் ஆட்சியாளர்கள் பின் நிற்கின்றார்கள்.

நாங்கள் புதிய அரசியல் அமைப்பு வரைபு தொடர்பாக எண்பதுக்கு மேற்பட்ட வழிநடத்தல் கூட்டங்களில் பங்கு கொண்டு, அதில் முழுமையாக செயற்பட்டு அனைத்து கட்சிகளின் இனக்கப்பாட்டுடன் ஒரு அதிகாரபகிர்வு தொடர்பாக தீர்வுகளை எட்டினோம். அதனை நிறைவேற்றுகின்ற துணிவு ஜனாதிபதிக்குமில்லை பிரதமருக்கும் இல்லை .

இதனை நிறைவேற்றிவிட்டால் எங்கே தேர்தலில் தோற்றுவிடுவோம் என அஞ்சுகின்றனர், ஆனால் நாம் விடுவதாக இல்லை. எமது தமிழ் மக்கள் வாக்களின் மாட்டார்கள் என தெரிவித்த போது அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அவ்வாறு செய்ய வேண்டாம் நீங்கள் அவ்வாறு செய்தால் உங்கள் மக்கள் யார் வரக்கூடாது என நினைக்கின்றார்களோ அவர்கள் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என தெரிவித்தார்.

நாம் அரசுக்கு அழுத்தத்தை மட்டும்தான் கொடுக்க முடியம். நாங்கள் மீண்டும் ஆயுதம் தூக்கப் போகின்றோம் என சொல்லப்போவதில்லை.

இன்று தங்களது கட்சிக்கு எந்த கொள்ளையும் இல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிப்பதை மட்டுமே கொள்கையாக கொண்டு பிரச்சாரம் செய்து வரும் சில கட்சிகள் முதலில் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் ஒன்றுமையை சிதைக்கின்ற வேலையை ஊர் ஊராக சென்று சில பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த தேர்தலில் பியசேன என்றவருக்கு தமிழ் மக்கள் பாடம் புகட்டியது போல, முன்னாள் முதலமைச்சர் சிவி. விக்கினேஸ்வரனுக்கு தமிழ் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

எனவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்களின் ஒற்றுமையும் சர்வதேசத்தின் ஆதரவுமே ஒரே பலமாக உள்ளதே தவிர வேறு ஒன்றுமில்லை. எனவே எமது பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் ஊடாகத்தான் தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சுமார் 585 குடும்பங்களுக்கான வீடுகளை புனரமைப்பதற்கான காசோலையை பெற்றுக் கொள்வதற்கான அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டதுடன் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக மக்களை தெளிவூட்டும் மக்கள் சந்திப்பும் நேற்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் கலாசார மண்டபத்தில் இடம்பெற்று இருந்ததுடன் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரனின் அழைப்பின் பேரில் பிரதம அதிதிhயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கலந்த கொண்டு இருந்ததுடன் மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள், கட்சியின் நிர்வாக உறுப்பினர்கள் பொது மக்கள் என பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டு இருந்தனர்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், கே.கோடீஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன் ஆகியோரால் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பான விரிவாக விளக்கங்கள் மக்களுக்கு கொடுக்கப்பட்டதுடன் 585பேருக்கு வீடுகளை புனரமைப்பு செய்வதற்கான காசோலையை பெற்றுக் கொள்வதற்கான அனுமதி கடிதங்களும் பாராளுமன்ற உறுப்பினர்களால் மக்களுக்கு வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது. (007)

 

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!