மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில், சமுர்த்தி திணைக்களத்தின் சமுர்த்தி சமூக மட்ட அமைப்புக்களை பலப்படுத்தும் நோக்குடன் விழிப்பூட்டும் செயற்திட்டம், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர், உதவி பிரதேச acசெயலாளர் போன்றோரின் ஒழுங்கமைப்புக்கமைவாக இன்று ஆரம்பமாகியது.
சமுர்த்தி திணைக்களத்தின் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களை மேலும் பலப்படுத்தும் முகமாக மேற்படி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நிகழ்வில் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் எவ்.மனோகிதராஜ் தெரிவித்தார்.
இவ் வேலைத் திட்டம் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்றையதினம் ஆயித்தியமலை வடக்கு, ஆயித்தியமலை தெற்கு, மகிழவட்டவான், நரிப்புல் தோட்டம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த கிராம மட்ட அமைப்புக்களின் நிர்வாக பிரதிநிதிகளுக்கும் தொடர்ந்து ஏனைய கிராமங்களுக்கும் நடாத்தப்படவுள்ளது.
இதன் போது, வரவு செலவு கணக்கு பதிவு விடயம், கூட்டங்கள் நடாத்துதல், சமுர்த்தி திட்டத்துடன் இணைந்த செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் விழிப்பூட்டப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் எவ்.மனோகிதராஜ், பிரதேச முகாமைத்துவப் பணிப்பாளர் க.தங்கத்துரை, பிரதேச சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் வே.பரஞ்சோதிநாதன், சமுர்த்தி உத்தியோகத்தர் பொ.முருகேசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (007)