வடமராட்சியில் கடற்படை கப்பல் மோதி மீனவர் படகு சேதம்

யாழ்ப்பாணம் வடமராட்சியில், மீனவர் படகு மீது, கடற்படை கப்பல் மோதியதில், மீனவர் படகு சேதமடைந்துள்ளது.


யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியிலிருந்து நேற்று மீன்பிடித் தொழிக்குச் சென்று மீனவர்கள் கரை திரும்பிக் கொண்டிருந்தவேளை, கடற்கரையிலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் வழிமறித்த கடற்படையினர் தமக்கு மீன் தருமாறு கேட்டுள்ளனர்.

இந்நிலையில் மீனை கொடுத்து விட்டு கரைக்குத் திரும்ப முற்பட்ட வேளை கடற்படையினர் குறித்த படகு மீதி மோதி தள்ளியதாகவும் இதனால் கணபதிப்பிள்ளை சிவச்சந்திரன் என்பவரது படகு பலத்த சேதமடைந்துள்ளதாவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

குறித்த படகில் பறவை வலைத் தொழிலுக்காகச் சென்ற ஜெயபாலு ஜெயநேசன், சௌந்தராசா செல்வக்குமார் ஆகிய இருவரும் கரைநோக்கி திரும்பி வரும்போது இரவு மணியளவிலேயே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தமது படகு கடலில் மூழ்குவதாகவும், சத்தமிட்டு தம்மைக் காப்பாற்றுமாறு கத்தியும் கடற்படை தம்மை அப்படியே விட்டுச் சென்றுவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்ததாக, எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து தாம் உடனடியாக கரையிலுள்ள நண்பர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களது படகுகளை வரவழைத்தே கரை திரும்பியதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம், பளை பொலிஸ் நிலையம் போன்றவற்றில் முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!